காதலர்தினம்

Home காதல் காதலர்தினம்  Basic PC shortcuts CTRL combination shortcut keys New Tamil songs



காதலர்தினம்

ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி...
நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்...
இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள்.

வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எழுதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக் கூடாது.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும்.
இவ் அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார்.

அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின்
கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான். கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன.

அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

- உன்னுடைய வலண்டைனிடமிருந்து! -

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரிமாறப் படும் வைரவரிகள் இவை. இதுவே முதல் வலண்டைன் மடல்.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார். ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம் பாகான்(மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டைன புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டைன் தினம் (ST. Valentins Day) உலகம் முழுவதும் கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர்தினம்.

***********************************
ஒருவர் இன்னொருவரால் காதலிக்கப் படும் போது அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன் போராட்டத்திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஒரு படி மேலே சிறந்து விளங்குகிறார். என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு.

இது அன்றைக்கே தெரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டைனுக்கு இப்படியொரு கொடுமையைச் செய்திருக்க மாட்டார்.